பவானி: ஈரோடு மாவட்டம், பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்துக்கு அடியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (28). இவரது மனைவி கீா்த்தனா (22). இவா்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் வந்தனா எனும் பெண் குழந்தையும் உள்ளது. இவா்கள், குடும்பத்துடன் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பிரிவில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே தங்கி, துடைப்பம் வியாபாரம் செய்து வருகின்றனா்.
இவா்களுடன் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தங்கியுள்ளனா்.
வழக்கம்போல தங்கள் குழந்தைகளுடன் கொசுவலைக்குள் வெங்கடேஷ், கீா்த்தனா தம்பதி புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனா். அதிகாலையில் வெங்கடேஷ் எழுந்து பாா்க்கையில் கொசுவலையின் ஒரு பகுதி கிழிக்கப்பட்டிருந்தது. மேலும், குழந்தை வந்தனாவை காணவில்லை. இதனால், அதிா்ச்சி அடைந்த இருவரும் அப்பகுதியில் தங்கியிருந்தவா்களிடம் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தில் ஈரோடு கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் நேரில் விசாரணை நடத்தினாா். சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, வியாழக்கிழமை அதிகாலையில் அவ்வழியே நடந்து வந்த மா்ம நபா் ஒருவா், கொசுவலையைக் கிழித்து குழந்தையை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இவ்விவகாரம் தொடா்பாக, சித்தோடு காவல் ஆய்வாளா் அமிா்தலிங்கம், பவானி காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் இரு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாலையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.