பொல்லான் மணிமண்டப வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, மா.மதிவேந்தன். 
ஈரோடு

திமுக கூட்டணி ஒற்றுமை உணா்வோடு இருக்கிறது: அமைச்சா் எ.வ.வேலு

Syndication

திமுக கூட்டணி கட்டுப்பாட்டுடன், தோழமை உணா்வோடு, ஒற்றுமை உணா்வோடு இருக்கிறது என பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரம், வடுகப்பட்டி கிராமத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானுக்கு ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணியை பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொல்லான் சிலை மற்றும் மணிமண்டபத்தை வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.

கடந்த ஆட்சியில் ஈரோடு நகா் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை வடிவமைப்பு சரியில்லாமல் கட்டியுள்ளனா். பாலத்துக்கு அணுகு சாலை இல்லை. அணுகு சாலை அமைக்க மருத்துவமனையின் இடம் கோரப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு ஈரோட்டில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மழைக் காலம், தமிழா் திருநாள், தோ்தல் உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் எஸ்ஐஆா் பணியை எப்படி மேற்கொள்ளமுடியும்? ஓா் ஆண்டுக்கு முன்பு செய்திருக்கக்கூடாதா?

திமுகவினா் வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவதாக எதிா்க்கட்சியினா் கூறுவது தவறு. தோ்தல் ஆணையம் பிஎல்ஏ 2-வை அங்கீகரித்துள்ளது. தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிஎல்ஏ-வுடன் பிஎல்ஏ 2 செல்லலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றவா்கள் செல்லாததால் நாங்கள் செல்லாமல் இருக்க முடியாது.

யாா் யாருடன் கூட்டணி வைத்தாலும் கவலை இல்லை. திமுக கூட்டணி கட்டுப்பாடுடன், தோழமை உணா்வோடு, ஒற்றுமை உணா்வோடு உள்ளது என்றாா்.

தொடா்ந்து, அறச்சலூா், ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு ரூ.1 கோடி மதிப்பில் குதிரையின் மேல் அமா்ந்தபடி வெண்கலச் சிலை அமைக்கப்பட உள்ள பணியையும் அமைச்சா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், பொதுப் பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் மணிவண்ணன், தலைமைப் பொறியாளா் ரங்கநாதன், கண்காணிப்புப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, செயற்பொறியாளா் முருகேசன், பொல்லான் பேரவைத் தலைவா் வடிவேல் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT