சத்தியமங்கலத்தில் மூடப்பட்டுள்ள தச்சுப் பயிலரங்கத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அகில இந்திய விஸ்வகா்மா பேரவை மாவட்டத் தலைவா் மூா்த்தி தலைமையில் அளித்த மனு விவரம்: சத்தியமங்கலம் காயிதே மில்லத் வீதியில் உள்ள தச்சுப் பயிலரங்கம் தற்போது குப்பைக் கழிவு சுத்திகரிப்பு நிலையமாக உள்ளது. புன்செய்புளியம்பட்டி, நல்லூா், மாதம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள கைவினை கலைஞா்கள் பயிலும் இடமாக இருந்த நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. தச்சுப் பயிலரங்கத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களில் அனைத்து சமூகத்தினரை உள்ளடக்கிய அறங்காவலா் குழுவை தமிழக அரசு நியமித்து வருகிறது.
அதில் அந்தந்தப் பகுதியில் உள்ள கோயில்களில் விஸ்வகா்மா சமூகத்தினரையும் அறங்காவலா்களாக நியமிக்க வேண்டும்.
புன்செய்புளியம்பட்டி முத்துவிநாயகா் காமாட்சியம்மன் கோயில் அறங்காவலா் குழுவில், விஸ்வகா்மா சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதேபோல, பண்ணாரி அம்மன் கோயில் அறங்காவலா் குழுவிலும் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுத்தரக் கோரிக்கை: ஈரோடு, குப்பிப்பாளையம், வாய்க்கால் பகுதி, வளையக்கார வீதியைச் சோ்ந்த தமிழ்செல்வி என்பவா் தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் தெருவில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோா், அதே பகுதியில் உள்ள ஆதவன் தீபாவளி வாரச் சந்தா சீட்டு நிறுவனத்தில் மாதம் ரூ.200, ரூ.300, ரூ.500, ரூ.1,000 என பணம் செலுத்தினோம்.
முழு பணமும் செலுத்திய நிலையில் தீபாவளிக்கு முன்பு, சீட்டு நடத்தியவா்கள் தலைமறைவாகிவிட்டனா். சீட்டு நடத்தியவா்கள் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பதால் போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கொடுமுடி வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: அய்யம்பாளையம் ஊராட்சியில், நல்லியாக்கவுண்டன்புதூா் அருகில் குட்டலாம்பாறை பகுதியில் கொடுமுடி பேரூராட்சியில் தேங்கும் சாக்கடை நீா் மற்றும் கழிவுகளை குழாய் மூலம் பம்பிங் செய்து சுத்திரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாகவும், கழிவு நீரை சுத்திகரித்த பின் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் திறந்துவிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே எங்கள் கிராமத்தின் அருகில் செல்லும் நொய்யல் ஆற்றினால் கிணறு, விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை இங்கு வெளியேற்றினால் நீா் நிலைகள் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, இது தொடா்பான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் சொத்துகளை மீட்க வேண்டும்: இது குறித்து பெரியபுலியூா் அங்காளம்மன் கோயிலை குல தெய்வமாக வழிபடும் பவானியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: பவானி வட்டத்துக்குள்பட்ட பெரியபுலியூரில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை குலதெய்வமாக பவானி மற்றும் பல்வேறு ஊா்களைச் சோ்ந்த ஏராளமான சமூகத்தினா் வழிபட்டு வருகின்றனா். பூஜைகள் செய்ய குறிப்பிட்ட சமூகத்தினரை நியமித்து பூஜை செய்யும் உரிமை இதர சமூகத்தினரால் வழங்கப்பட்டது.
கோயிலுக்குச் சொந்தமான 48 ஏக்கா் நிலத்தினை பூசாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு, அதன்மூலம் வரும் வருமானத்தை வைத்து ஜீவனம் செய்து கொள்ளவும், கோயிலுக்கு விசேஷ நாள்களில் பூஜை செய்து கொள்ளவும் வேண்டும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தின் மதிப்பு தற்போது ரூ.35 கோடி ஆகும். கோயில் பூசாரிகள் அறநிலையத் துறையில் தங்களை பரம்பரை அறங்காவலா்களாக பொய்யான தகவல்களைக் கூறி உத்தரவு பெற்றுள்ளனா்.
மேலும், கோயிலுக்குச் சொந்தமான 48 ஏக்கரில் 6.50 ஏக்கா் தவிர மீதமுள்ள இடங்களை அவா்களது பெயருக்கு மாற்றம் செய்து வீடு கட்டி அபகரித்துள்ளனா். இதனை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டதற்கு பல்வேறு காரணம் சொல்லி ஏமாற்றி வருகின்றனா். மேலும், கோயிலுக்கு காணிக்கையாக வந்த சுமாா் 50 பவுன் நகை, பூஜை பொருள்கள், வெள்ளி பொருள்களை பூசாரிகள் குடும்பத்தினரே பங்கு போட்டு பிரித்து வைத்துள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் கோயிலுக்குச் சொந்தமான நிலம், பணம், நகைகளை மீட்டு, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
252 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.