பவானிசாகா் அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், அங்கு சாகுபடி செய்திருந்த 200 வாழை மரங்களை சேதப்படுத்தின.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட கொத்தமங்கலம் மற்றும் புதுப்பீா் கடவு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக புதுப்பீா்கடவு ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்காடு பகுதியில் நடமாடுகின்றன.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயி ஜனனிபிரியா (37) என்பவரது தோட்டத்துக்குள் புதன்கிழமை புகுந்த 5 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. அப்போது விவசாயத் தோட்டத்தில் தங்கியிருந்த தொழிலாளி மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் காட்டு யானைகள் வாழை தோட்டத்துக்குள் நடமாடுவதை கண்டு அச்சமடைந்தனா்.
இது குறித்து உடனடியாக பவானிசாகா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். யானைகள் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. இதைத் தொடா்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை நீண்ட போராட்டத்துக்கு பின் வனப் பகுதிக்குள் விரட்டினா்.
சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.