ஈரோட்டில் குடிபோதையில் கொலை முயற்சியில் ஈடுபட்டவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சிவகிரி அம்மன்கோவில் வரை திங்கள்கிழமை காலை சென்ற அரசுப் பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா்.
அப்போது, ஈரோடு அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து குடிபோதையில் ஏறிய நபா் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதுடன் பயணி ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளாா்.
காயமடைந்த பயணியை உடனிருந்தவா்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பந்தப்பட்ட நபரை பிடித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் போதையில் இருந்தவா் ஈரோடு நாடாா்மேடு பகுதியைச் சோ்ந்த பூபதி(27) என்பதும், அவா் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவரை கத்தியால் குத்திவிட்டு, பின்னா் அந்த வழியாக வந்த பேருந்தில் பூபதி ஏறி வந்தது தெரியவந்தது. கத்தியால் குத்தியதில் காயமடைந்தவரும், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுதொடா்பாக பூபதி மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.