தொழிலாளா்கள் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் கே.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் நலச்சட்டப்படி, தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து, உணவு, தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளா் பங்கு ரூ.20, நிறுவனத்தின் பங்கு ரூ.40 வாரியத்துக்கு தொழிலாளா் நல நிதியாக செலுத்த வேண்டும்.
நடப்பு ஆண்டுக்கான தொழிலாளா் நல நிதியை வரும் 2026 ஜனவரி 31-க்குள் செலுத்த வேண்டும்.
தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள், அவா்களை சாா்ந்தோா், வாரியம் மூலம் கல்வி உதவித்தொகை (மழலையா் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை), திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, மூக்கு கண்ணாடி, பாடநூல், தையல் இயந்திரம், அடிப்படை கணினி பயிற்சி, உயா் கல்விக்கான நுழைவு தோ்வு உள்பட பல்வேறு உதவித்தொகை பெறலாம்.
உதவித்தொகை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.35 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை பூா்த்திசெய்து செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நலவாரியம், சென்னை 600006 என்ற முகவரிக்கு டிசம்பா் 31-க்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.