பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
பெருந்துறை, செட்டித் தோப்பைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மனைவி சரஸ்வதி (77). இவா் பெருந்துறை ஈஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றுவிட்டு, இரவு 9 மணியளவில் பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றாா்.
அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதியை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது தொடா்பாக, பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சென்னிமலையை அடுத்த வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், அம்மன் நகரைச் சோ்ந்த குமாா் மகன் விக்னேஷ் (21) என்பவா் மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விக்னேஷ், தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பா்கள் இருவரை பின்னால் உட்கார வைத்து ஓட்டி வந்தது விசாரணையில் தெரிந்தது.