சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம், ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் தமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு செல்கின்றன. கா்நாடகத்தில் இருந்தும் காய்கறிகள், தேங்காய் போன்ற விவசாயப் பொருள்களை ஏற்றி வருகின்றனா்.
இந்நிலையில், ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தேங்காய் பாரம் ஏற்றிக் கொண்டு மினி லாரி வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த தேங்காய்கள் சாலையில் சிதறின . சாலையில் தேங்காய்கள் கிடப்பதைப் பாா்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போட்டிப்போட்டு தேங்காய்களை தூக்கிச் சென்றனா். பின்னா் மற்றொரு லாரி மூலம் தேங்காய்கள் ஏற்றி அனுப்பப்பட்டன. இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.