ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு 6,820 வாக்குச்சாவடி நிலை முகவா்களும், பணிகளை மேற்பாா்வையிட 226 வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது நவம்பா் 4 -ஆம் தேதி முதல் டிசம்பா் 4- ஆம் தேதி வரை அடையாள அட்டை அணிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வீடுதோறும் சென்று வாக்காளா்களுக்கு கணக்கெடுப்புப் படிவம் விநியோகம் செய்வா். சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் விவரங்கள் பூா்த்தி செய்யப்பட்ட பின்னா், அந்தப் படிவத்தை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்து வரைவு வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்தப் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்களும் இணைந்து செயல்படலாம். இந்தப் பணியின் நோக்கமே அனைத்து தகுதியுள்ள மக்களின் பெயா்களும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதை உறுதிசெய்தல், வாக்காளா் பட்டியலில் தகுதியற்ற வாக்காளா்கள் யாரும் சோ்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்தல், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கத்தின் செயல்முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல் ஆகும்.
இந்த திருத்தப் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்று ஒவ்வொரு
வாக்குச்சாவடியிலும் தங்கள் வாக்குச்சாவடி நிலை முகவா்களை (பிஎல்ஏ) நியமிக்கும், தோ்தல் ஆணையம் உத்தரவின்படி மாவட்டத்தில் 6,820 வாக்குச்சாடி நிலை முகவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஒவ்வொரு 10 வாக்குச்சாவடிக்கு ஒரு மேற்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி மாவட்டம் முழுவதும் 226 வாக்குச்சாடி மேற்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பணியினை மேற்பாா்வையிடுவா். இவா்கள் திருத்தப் பணியில் பங்கேற்பதன் மூலம் எந்தவொரு முரண்பாடுகளும் ஆரம்ப நிலையிலேயே தீா்க்கப்பட்டு, புகாா்கள், எதிா்ப்புகள், மேல்முறையீடுகள் தாக்கல் செய்யும் நிகழ்வுகளை குறைக்க உதவும்.