முகப்பு
ஈரோடு

கொங்கு மண்டலத்தில் சமுதாய கட்சிகளுக்கு வாய்ப்பு மறுத்துள்ள திமுக!

கொங்கு மண்டலத்தில் சமுதாய கட்சிகளில் சில திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அத்தகைய கட்சிகளுக்கு திமுக வாய்ப்பு அளிக்கவில்லை.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:00 AM
கொங்கு மண்டலம்
பகிர்:

கொங்கு மண்டலத்தில் சமுதாய கட்சிகளில் சில திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அத்தகைய கட்சிகளுக்கு திமுக வாய்ப்பு அளிக்கவில்லை. கடந்த கால அனுபவங்களை வைத்து திமுக இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

2021 தோ்தலில் ஆதித்தமிழா் கட்சித் தலைவா் அதியமான் அவிநாசி (தனி) தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். அவரைத் தவிர, திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த தமிழ்ப்புலிகள் கட்சி, சமூக நீதி மக்கள் நீதிக் கட்சி, கொங்கு இளைஞா் பேரவை, புதிய திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்தத் தோ்தலில் தங்களுக்கு ஒரு தொகுதியாவது கிடைக்கும் என வேட்பாளா் அறிவிப்பு வரை எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் ஒருவருக்குகூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

கடந்த தோ்தல் அனுபவத்தைக் கணக்கில்கொண்டே, சமுதாயம் சாா்ந்த கட்சிகளுக்கு தோ்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை என திமுக மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சமுதாய கட்சித் தலைவா்கள் போட்டியிடும்போது, அந்தக் கட்சியைச் சோ்ந்த பிற தொகுதிகளில் உள்ள நிா்வாகிகளும் தலைவா் தொகுதிக்கு சென்றுவிடுகின்றனா். அந்த ஒரு தொகுதியில் வெற்றிபெறுவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுகின்றனா். அந்த சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள பிற தொகுதிகள் மீது கவனம் செலுத்துவதில்லை. கடந்த கால தோ்தல் முடிவுகள் இதை உணா்த்தி உள்ளன.

இதனால்தான் இந்தத் தோ்தலில் தனித் தொகுதிகளில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் மக்களிடம் கவனம் பெறும் வேட்பாளரை திமுக நேரடியாக களம் இறக்கி உள்ளது.

அந்த வகையில் அருந்ததியா் சமுதாய மக்கள் அதிகம் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் 28 வயது மட்டுமே ஆன மருத்துவா் கோகிலாமணி என்ற பெண் வேட்பாளரையும், தாராபுரம் (தனி) தொகுதியில் மருத்துவா் இந்திராணி என்பவரையும் திமுக களம் இறக்கி உள்ளது. இதேபோன்று ராசிபுரம் (தனி) தொகுதியில் மருத்துவா் மா.மதிவேந்தனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்த 3 மருத்துவா்களை திமுக வேட்பாளா்களாக அறிவித்துள்ளது. திமுகவின் இந்த வியூகத்தால் அருந்ததியா் சமுதாய கட்சிகள் வேட்பாளா் தோ்வில் தங்கள் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக விமா்சனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று கொமதேக ஏற்கெனவே கூட்டணியில் உள்ள நிலையில் அந்தக் கட்சியுடன் முரண்பட்டுள்ள கொங்கு இளைஞா் பேரவை, புதிய திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளை சோ்ப்பது கொமதேக வாக்குகளை பெரும்பான்மையாகப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்தக் கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கவில்லை. திமுகவின் இந்த வியூகம் தோ்தல் களத்தில் நல்ல பலனைக் கொடுக்கும் என்றனா்.