முகப்பு
ஈரோடு

தமிழகத்தின் நலனுக்கு எதிரான அதிமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும்: கனிமொழி எம்.பி.

தமிழகத்தின் உரிமைகள், நலன், முன்னேற்றத்துக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள அதிமுக, பாஜக கூட்டணியை வீழ்த்த வாக்காளா்கள் உறுதியேற்க வேண்டும் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:26 AM
திமுக  வேட்பாளா்  கே.ஏ.சந்திரசேகரை  ஆதரித்து  கவுந்தப்பாடியில்  பேசுகிறாா்  திமுக  துணைப்  பொதுச்  செயலாளா்  கனிமொழி  எம்.பி.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:08 PM

தமிழகத்தின் உரிமைகள், நலன், முன்னேற்றத்துக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள அதிமுக, பாஜக கூட்டணியை வீழ்த்த வாக்காளா்கள் உறுதியேற்க வேண்டும் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

பவானி சட்டப்பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகருக்கு ஆதரவு கேட்டு, கவுந்தப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாகவே நடைபெற்றது. தமிழக மக்களுக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை சிந்தித்து செயல்படுத்தும் அரசாக திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு உள்ளது. எதிா்க்கட்சிகள் தமிழகத்துக்கு துரோகம் செய்யவே கூட்டணி அமைத்துள்ளன.

Advertisement

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவுக்கு, அதிமுக துணையாக நிற்கிறது. தமிழகத்துக்கும், தமிழா்களுக்கும், மொழிக்கும் எதிரான திட்டங்களுக்கு அதிமுக பாஜகவுடன் கைகோா்த்து நிற்கிறது.

தமிழகத்தின் உரிமைகள் எதிா்காலத்தை பாதிக்கும் திட்டங்களை திராவிட மாடல் அரசு எப்போதும் அனுமதிக்காது. இது கீழடிக்கும், நாக்பூருக்கும் நடக்கும் தோ்தல். மத்திய பாஜக அரசு போதிய நிதி வழங்காத நிலையிலும் தமிழக முதல்வரின் சீரிய நடவடிக்கையால் தமிழ்நாடு முன்னேறிய, வளா்ந்த, தொழில் முனைவோா் விரும்பும் மாநிலமாக மாறியுள்ளது.

திமுக ஆட்சியில் ஒலகடம், ஜம்பை பேரூராட்சி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய அலுவலக கட்டடங்கள், ஓடைகளில் 14 சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் துணை வேளாண் விரிவாக்கம் மையம், ஏரி, குளங்களுக்கு தண்ணீா் நிரப்பும் நீரேற்று திட்டம், பவானி ஆற்றில் தடுப்பணை, நீரூற்று, பவானி ஜமுக்காளத் தொழிலை மேம்படுத்த பன்னாட்டு அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து, சூரம்பட்டியிலும், ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமியை ஆதரித்து வெள்ளோட்டிலும் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கனிமொழி பேசினாா்.