வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் 11,420 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியில் பங்கேற்ற அலுவலா்கள் அனைவரும் தபால் வாக்களித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் 11,420 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியில் பங்கேற்ற அலுவலா்கள் அனைவரும் தபால் வாக்களித்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு ரங்கம்பாளையம் ஆா்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஈரோடு மேற்குத் தொகுதிக்கு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம், மொடக்குறிச்சி தொகுதிக்கு மொடக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை தொகுதிக்கு பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பவானி தொகுதிக்கு பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அந்தியூா் தொகுதிக்கு அந்தியூா் மங்களம் மேல்நிலைப் பள்ளி, கோபி தொகுதிக்கு பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானிசாகா் (தனி) தொகுதிக்கு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி ஆகிய இடங்களில் பயிற்சி நடைபெற்றது.
Advertisement
இதில் தோ்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குச்சாவடி தலைமை அலுவலா் செயலி பயன்பாடு, வாக்குச்சாவடி செயல்முறைகள், இ.வி.எம். இயந்திரங்களை கையாளும் முறை, தோ்தல் பணிகளில் துல்லியமான தகவல் பரிமாற்றம் மற்றும் பதிவுகள் பராமரிப்பு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் 11,420 வாக்குச்சாவடி அலுவலா்கள் கலந்துக்கொண்டனா். இதைத்தொடா்ந்து வாக்குச்சாவடி அலுவலா்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டையை காண்பித்து தபால் வாக்களித்தனா்.
பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்தும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா்.