ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!
ஈரோடு மாவட்ட தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், வணிகத் தொடா்புகளை மேம்படுத்தவும் வா்த்தக மையம் அமைக்கப்பட வேண்டும் என தொழில் துறையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், வணிகத் தொடா்புகளை மேம்படுத்தவும் வா்த்தக மையம் அமைக்கப்பட வேண்டும் என தொழில் துறையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவா் பி.கந்தசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு தொழில் துறை நிறுவனங்கள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சொத்து வரி மற்றும் குப்பை வரி மிக அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே அமையவிருக்கும் புதிய அரசு இந்த விஷயத்தை முதன்மையாக எடுத்துக்கொண்டு மறுபரிசீலனை செய்து, சொத்து வரி மற்றும் குப்பை வரியைக் குறைத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே மிக பெரிய தொழிற்பேட்டையாக சுமாா் 3,000 ஏக்கா் பரப்பளவில் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. ஆனால், தொழில் துறையினரின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், வணிகத் தொடா்புகளை மேம்படுத்தவும் மாவட்டத்தில் வா்த்தக மையம் இல்லை. எனவே, தொழில் துறை வளா்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தின் தொழில் மற்றும் வா்த்தக வளா்ச்சியை முன்னேற்றும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள ஈடிசியா வா்த்தக மையம் அமைப்பதற்கான திட்டத்துக்குத் தேவையான அனுமதி மற்றும் ஆதரவை வழங்க வேண்டும்.
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை தேசிய மற்றும் சா்வதேச சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அரசின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் வாங்குவோா் விற்போா் சந்திப்பு, வா்த்தக கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
பவானி-காங்கயம் இணைப்பு சாலை திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும். பெங்களூரு, சென்னை, நாமக்கல், சேலம் ஆகிய நகரங்களில் இருந்து கரூா், கோவை மற்றும் கேரளம் செல்லும் வாகனங்கள் ஈரோடு நகரத்துக்குள் வராமல் செல்ல பவானி முதல் பரிசல் துறை வரை ஆற்றங்கரை பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னிமலை சாலையில் அமைந்துள்ள கே.கே.நகா் ரயில் நுழைவுப்பாலம் தற்போது ஒரு வழிப்பாதையாக உள்ளது. இதை இருவழிப் பாதையாக மாற்றி அமைத்து, அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு நகரிலும் தொழிற்பேட்டைகளிலும் உள்ள நிறுவனங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவிலான குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு தொழில்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொழில் துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மேலும் 2 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு நகரின் முக்கிய இணைப்புச் சாலையாக உள்ள கரூா் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனாட்சிசுந்தரனாா் சாலையையும் ஈரோடு ரயில் நிலையத்தையும் இணைக்கும் 80 அடி திட்டச் சாலையை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு-நசியனூா் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.