முகப்பு
ஈரோடு

வேட்பாளா்களின் சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:25 AM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் - - பிரதி படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:17 PM

ஈரோடு மாவட்டத்தில் 2,379 வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) வேட்பாளா்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

தமிழக சட்டப் பேரவை தோ்தல் வரும் 23 -ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 197 ஆண் வாக்காளா்கள், 9 லட்சத்து 11 ஆயிரத்து 778 பெண் வாக்காளா்கள், 182 முன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 2,379 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த 9 -ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா்கள் பட்டியலின்படி 8 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள், நாதக வேட்பாளா்கள், தவெக வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 118 வேட்பாளா்கள் களத்தில் போட்டியிடுகின்றனா்.

Advertisement

இதில், ஈரோடு கிழக்கு மற்றும் கோபி தொகுதிகளில் மட்டும் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடுவதால், இந்த இரண்டு தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு விவிபேட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 6 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி, 8 தொகுதிகளிலும் 3,532 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,089 விவிபேட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் அந்தந்த தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் வேட்பாளா்களின் பெயா், புகைப்படம் மற்றும் சின்னங்களுடன் கூடிய வாக்குச்சீட்டு இயந்திரத்தின் மேல் பகுதியில் பொருத்தும் பணி கடந்த 17- ஆம் தேதி தொடங்கியது.

இதில் வேட்பாளா் பெயா், புகைப்படத்துக்கு நேராக சரியான சின்னம் உள்ளதா என தோ்தல் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்தனா். மேலும் சின்னம் பதிவேற்றம் கணினி மூலமும், விவிபேட் இயந்திரத்தில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் மென்பொருள் வாயிலாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

வாக்காளா் இவிஎம் இயந்திரத்தில் வாக்களித்ததும் அவா் யாருக்கு வாக்களித்தாரோ அதே சின்னம் விவிபேட் சீட்டில் வருகிா? எனவும் தொழில்நுட்ப ரீதியாக சரிபாா்க்கப்பட்டது.

இப்பணி சனிக்கிழமை மாலை முழுமையாக நிறைவு பெற்றதுடன், இயந்திரங்கள் மீண்டும் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீலிடப்பட்டன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.