முகப்பு
ஈரோடு

பா்கூா் மலைக் கிராமமான கத்திரி மலைக்கு கம்பிவழி மின்சாரம்!

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமமான கத்திரி மலை, நாடு சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளுக்குப் பின்னா் மின்சார வசதியை முழுமையாக பெற்றுள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 12:23 AM
மின் விநியோகத்தைத்  தொடங்கி வைக்கிறாா்  அந்தியூா்  எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். 
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:32 PM

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமமான கத்திரி மலை, நாடு சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளுக்குப் பின்னா் மின்சார வசதியை முழுமையாக பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் ஊராட்சியில் உள்ள 33 மலைக் கிராமங்களில் ஒன்றான கத்திரி மலையில் 82 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். சென்னம்பட்டி வன எல்லைக்குள் உள்ள இக்கிராமத்துக்கு தரையிலிருந்து செங்குத்தான மலைப் பாதையில் செல்ல வேண்டும். இக்கிராமத்தில் 30 மாணவா்கள் படிக்கும் நடுநிலைப் பள்ளி உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,578 அடி உயரத்தில் உள்ள இக்கிராம மக்கள் இரவில் நிலவின் வெளிச்சத்திலும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலும் வாழ்ந்து வந்தனா்.

பின்னா், தொழில்நுட்ப வளா்ச்சிக்குப் பின்னா் சூரியசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம் இரவில் வெளிச்சம் கிடைத்தது. மலைவாழ் மக்கள் வசிக்கும் இக்கிராமத்துக்கு கம்பி வழியாக மின்சாரம் கொண்டுச் செல்லத் தேவையான முயற்சிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடா்ந்து மேற்கொண்டு வந்தாா். இதன் தொடா்ச்சியாக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கத்திரி மலைக்கு மின்சார விஸ்தரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தாா்.

Advertisement

இத்திட்டத்துக்கு ரூ.3.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தரையிலிருந்து 8.34 கிலோ மீட்டா் தொலைவுக்கு 281 மின் கம்பங்கள் நடப்பட்டு, மின்கம்பிகள் மூலமாக மேட்டூா் - சத்யா நகா் துணை மின் நிலையத்தில் உள்ள காவேரிபுரம் மின்பாதை வழியாக உயா் அழுத்த மின்பாதையில் 11 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்லப்பட்டது. கத்திரி மலையில் 100 கேவிஏ மின்மாற்றியும் அமைக்கப்பட்டது. கடந்த 2025, அக்டோபா் மாதம் தொடங்கப்பட்ட இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அண்மையில் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

- மின்விளக்கு  வெளிச்சம்  கிடைத்ததற்கு  மகிழ்ச்சி  தெரிவிக்கும் கத்திரி மலைக் கிராம  மக்கள்.

இங்கு, 16 தெரு விளக்குகளுக்கும், மொத்தமுள்ள 82 வீடுகளில் முதல்கட்டமாக 10 வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, கத்திரி மலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், மின்மாற்றியை இயக்கிவைத்து, மின் விநியோகத்தைத் தொடங்கிவைத்தாா். மின்வாரிய அந்தியூா் உபகோட்டப் பொறியாளா் அங்கப்பன் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

நாடு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பின்னா், ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயிலின் நடுப்பகுதியில் அமைந்துள்ள இம்மலைக் கிராமத்துக்கு முதன்முறையாக கம்பி வழியாக மின்சாரம் வழங்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.