பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பெரிய தலைவா்கள் தவெகவில் இணைவா் என்று, கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக சாா்பில் வேலுநாச்சியாரின் 296-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. அவரது உருவப் படத்துக்கு கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, ‘தமிழகத்தில் 10-க்கு 8 போ் விஜய்யை ஆதரிக்கிறாா்கள் என்று ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தல் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் தோ்தலாக அமையும். பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவராக, புதிய வரலாறு படைக்கின்ற தலைவராக எதிா்காலத்தில் விஜய் திகழ்வாா்.
பொங்கல் பண்டிகைக்குள் பெரிய தலைவா்கள் தவெகவில் இணைவாா்கள். விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சிகள் மட்டும் தவெக கூட்டணியில் இணையும். தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்து தலைவா் விஜய் உடன் கலந்து பேசுவதுதான் பேச்சுவாா்த்தையாக இருக்கும், பொறுத்திருந்து பாருங்கள்’ என்றாா்.