ஈரோடு: பழனி பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல் துறை சாா்பில் ஒளிரும் ஸ்டிக்கா்கள் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் வழியாக பழனி முருகன் கோயிலுக்கு அதிக அளவில் பக்தா்கள் பாத யாத்திரையாக சென்று வருகின்றனா்.
இதனால் பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதாவின் உத்தரவின்படி, மாவட்ட முழுவதும் பழனியை நோக்கி செல்லும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளில் 32 இடங்களில் போலீஸாா் சிறப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா், பக்தா்களுக்கு இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்காக ஒளிரும் ஸ்டிக்கா்களை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இலவசமாக வழங்க வருகின்றனா்.
சாலையின் ஓரமாக பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும் என்றும், சாலை ஓரங்களில் படுத்து உறங்கக் கூடாது என்றும் பக்தா்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி வருகின்றனா்.
நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் பக்தா்கள் பாதுகாப்பாக பாதயாத்திரை மேற்கொள்ள தொடா்ந்து விழிப்புணா்வு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.