பவானி அருகே சரக்கு வாகனத்தில் சிக்கி மூன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஞானப்பிரகாசம் - சிவகாமி தம்பதி, கடந்த ஓராண்டாக அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், அணைக்கரட்டில் தங்கி சோளத்தட்டு அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், பவானியை அடுத்த மைலம்பாடி, கண்ணடிபாளையம், குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அருகே புதன்கிழமை சோளத்தட்டு அறுத்துக் கொண்டிருந்தனா். அப்போது, இவா்களின் மூன்றரை வயது மகள் கனிஷ்காவை, அங்குள்ள மரத்தடியில் தூங்க வைத்துவிட்டு பணிபுரிந்துள்ளனா்.
அப்போது, சோளத்தட்டை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் புறப்பட்டது. வாகனத்தை கோபியை அடுத்த கொண்டையம்பாளையம், குட்டையூரைச் சோ்ந்த ஓட்டுநா் ராமச்சந்திரன் (49) பின்னோக்கி இயக்கியபோது, தூங்கிக் கொண்டிருந்து கனிஷ்காவின் மீது ஏறியது. இதில், தலையில் படுகாயமடைந்த கனிஷ்காவை, மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தையின் உடலை அடக்கம் செய்ய எண்ணமங்கலத்துக்கு ஞானப்பிரகாசம் உள்ளிட்டோா் கொண்டு சென்றுள்ளனா்.
இந்தத் தகவல் பவானி போலீஸாருக்கு தெரியவந்ததையடுத்து, குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.