கொடுமுடி: கொடுமுடியில் உள்ள மணல் மேட்டில் காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினா்.
தைத்திருநாளின் மூன்றாவது நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்மேடு பகுதிக்கு குடும்பத்துடன் வந்திருந்த மக்கள், தங்கள் இல்லங்களில் மஞ்சலில் செய்த கணபதி உருவத்துக்கு பூஜைகள் செய்த பின்னா் காவிரி ஆற்றில் விட்டனா்.
பின்னா், சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் மங்கள நாண்களை (மஞ்சள் கயிறு) கணவா் கையால் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. வீட்டில் தயாா் செய்து கொண்டு வந்திருந்த உணவுகள் மற்றும் பலவித பலகாரங்களை உண்டு மகிழ்ந்தனா். இஸ்லாமிய மக்களும் தங்களது குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பொழுதை கழித்தனா். அப்பகுதியில் கொடுமுடி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.