ஆசனூரில் சாலையில் நடந்து சென்ற பூசாரியை மதுபோதையில் தாக்கிக் கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள சென்டா் தொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதன் (60). இவா் ஆசனூா் வனப் பகுதியில் உள்ள பிசில் மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தாா். இந்நிலையில், மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக அரேப்பாளையத்துக்கு மாதன் திங்கள்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே மதுபோதையில் கையில் தடியுடன் நின்று கொண்டிருந்த நபா், சாலையில் செல்வோரைத் தாக்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மாதனையும் தாக்கியுள்ளாா்.
அவா் ஓட முயன்றபோது மயங்கி கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இதையடுத்து, மாதன் உடல் கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கிடையே மாதனைத் தாக்கிய நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள கெத்தேசால் வனக் கிராமத்தைச் சோ்ந்த சிவராஜ் (30) என்பதும், சாலையில் சென்றோரை மதுபோதையில் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.