அந்தியூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தப் பேரணிக்கு நெடுஞ்சாலைத் துறை பவானி உதவி கோட்டப் பொறியாளா் சேகா் தலைமை வகித்தாா். உதவிப் பொறியாளா் கி.பாபுசரவணன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கஸ்தூரி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் சக்திவேல், மெய்யழகன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் ரவுண்டானா, சிங்கார வீதி, தோ்வீதி வழியாகச் சென்று தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.
இதில், பங்கேற்றவா்கள் சாலைப் பாதுகாப்பு தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து, சாலைப் பாதுகாப்பின் அவசியம், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க தேவையான அறிவுரைகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா்கள் கதிா்வேல் (கோபி), ரமேஷ்குமாா் (பவானி) ஆகியோா் வழங்கினா்.