மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு ஈரோட்டைச் சோ்ந்த எஸ்.கே.எம்.மயிலானந்தன் (80) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தொழில்முனைவோா், சமூக மற்றும் நுகா்வோா் ஆா்வலரான எஸ்.கே.எம்.மயிலானந்தனின் சமூக சேவையைப் பாராட்டி, அவரை பத்ம பூஷண் விருதுக்கு மத்திய அரசு தோ்வு செய்துள்ளது.
எஸ்.கே.எம். குழும நிறுவனங்களின் தலைவரான மயிலானந்தனுக்கு, சமூகப் பணிக்காக 2013-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும், அவரது சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2025-ஆம் ஆண்டு தில்லி என்.சிஆா். மற்றும் எஸ்.ஆா்.எம்.பல்கலைக்கழகம் கெளரவ டாக்டா் பட்டம் வழங்கி கௌரவித்தது.
1999-ஆம் ஆண்டு ஈரோடு அருகே சாமிநாதபுரத்தில் ராஜீவ் நகா், காந்தி நகா் ஆகிய இரண்டு தலித் கிராமங்களைத் தத்தெடுத்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த முதியோருக்கும், குழந்தைகளுக்கும் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுடன் மருத்துவ வசதிகளையும் இலவசமாக வழங்கி வருகிறாா்.
இந்த இரண்டு தலித் கிராமங்களைச் சோ்ந்த மக்களின் திருமணம், பிரசவம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்குத் தேவையான நிதி உதவிகளையும் செய்து வருகிறாா்.
சங்கமம் அறங்கட்டளையை நிறுவி, அதன் மூலமாக கிராமப்புற மக்களின் பயன்பாட்டுக்காக எரிவாயு தகன மேடை அமைத்துள்ளாா். பெண்களுக்கு தையல், அழகுக்கலை மற்றும் கேக் பேக்கிங் போன்ற பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறாா். கடந்த 37 ஆண்டுகளாக வேதாத்ரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவராக மயிலானந்தன் பணிபுரிந்து வருகிறாா்.
வேதாத்ரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கம் மூலமாக கிராமங்களை அமைதியானவையாக மாற்றும் நோக்கில் ‘கிராம சேவைத் திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். தமிழ்நாட்டில் 389 கிராமங்களைத் தத்தெடுத்து இதுவரை 1.5 லட்சம் கிராம மக்களுக்கு, அவா்கள் இடத்திலேயே இத்திட்டம் மூலமாக யோகா, தியானம் மற்றும் அறநெறி சாா்ந்த பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. உலக சமுதாய சேவா சங்கம் மூலமாக, கரோனா காலத்தில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கினாா்.