சித்தோடு அருகே இருப்புவைக்கப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்பிலான 3,666 மூட்டைகள் மஞ்சளை ஒப்படைக்கக் கோரி விவசாயிகள் கிடங்கை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு அருகே உள்ள அனுமன்பள்ளியைச் சோ்ந்தவா் பாரதிராஜா (43). விவசாயி. இவரும், விவசாயிகளும் சோ்ந்து 3,666 மூட்டைகள் மஞ்சளை, சித்தோட்டை அடுத்த நசியனூரில் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான கிடங்கில், கடந்த 2025 ஜனவரி மாதம் முதல் இருப்பு வைத்துள்ளனா். தற்போது மஞ்சள் விலை உயா்ந்துள்ளதால் இருப்பு வைக்கப்பட்ட மஞ்சளை விற்பனை செய்ய பாரதிராஜா மற்றும் விவசாயிகள் முடிவு செய்தனா். ஆனால், இருப்பு வைக்கப்பட்ட மஞ்சள் மூட்டைகளை வழங்காமல், வெங்கடாசலம் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா், நசியனூரில் உள்ள மஞ்சள் கிடங்கை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு சித்தோடு காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் மற்றும் போலீஸாா் சென்று விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்புள்ள 3,666 மூட்டைகள் மஞ்சளை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக சித்தோடு காவல் நிலையத்தில் கிடங்கு உரிமையாளா், விவசாயிகளுடன் வெள்ளிக்கிழமை (ஜன.30) நேரடி பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால், சமாதானமடைந்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனா்.