அந்தியூா் வனத்தை ஒட்டியுள்ள இருவேறு பகுதிகளில் மா்ம விலங்குகள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்த நிலையில், தானியங்கி கேமரா பொருத்தி வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
அத்தாணி காலனி, வெங்கிடு தோட்டத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (50). விவசாயி. அந்தியூா் வனத்தை ஒட்டியுள்ள இவரது தோட்டத்து வீட்டில் வளா்த்து வந்த 2 ஆடுகள், 4 கோழிகளை மா்ம விலங்குகள் கடித்து உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த தகவலறிந்து அத்தாணி பிரிவு வனத் துறையினா் சென்று, மா்ம விலங்கு வந்து சென்ற பாதையில் காலடித் தடங்களை ஆய்வு செய்தனா். மேலும், வன விலங்கின் நடமாட்டத்தை கண்டறிய இருவேறு இடங்களில் தானியங்கி கேமராக்களையும் பொருத்தி கண்காணித்து வருகின்றனா்.
அம்மாபேட்டையில்... அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா், சுந்தராம்பாளையம், பந்தல்கரட்டைச் சோ்ந்தவா் சின்னு (75). கூலித் தொழிலாளி. இவா், தனது 7 ஆடுகளை பாலமலை அடிவாரத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு பட்டிக்குள் புகுந்த மா்ம விலங்கு 2 ஆடுகளைக் கடித்து கொன்றதோடு, ஓா் ஆட்டை வனத்துக்குள் இழுத்துச் சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்னம்பட்டி வனத் துறையினா் சென்று மா்ம விலங்கின் காலடித் தடங்களை ஆய்வு செய்தனா்.