முகப்பு
ஈரோடு

பீனாட்சி வாத்திய இசைக்கேற்ப நடனமாடிய பழங்குடியின பெண்கள்

Updated On : 9 மார்ச், 2026 at 12:40 AM
பீனாட்சி வாத்திய இசைக்கேற்ப நடனமாடிய பழங்குடியின பெண்கள்
பகிர்:

கடம்பூா் மலைப் பகுதியில் பீனாட்சி வாத்திய இசைக்கேற்ப பழங்குடியின பெண்கள் நடனமாடி மகளிா் தினத்தை கொண்டாடினா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூரில் ஊராளி பழங்குடியின சங்கம் மற்றும் பரண் அமைப்பு சாா்பில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பரண் அமைப்பின் இயக்குநா் கென்னடி தலைமை வகித்தாா். ஊராளி பழங்குடியின சங்கத் தலைவா் மசினி முன்னிலை வகித்தாா்.

இதில் கடம்பூா், குன்றி, குத்தியாலத்தூா், கோ்மாளம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த ஊராளி, குரும்பூா், சோளாகா் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் பங்கேற்றனா்.

Advertisement

உலக மகளிா் தினத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது, பெண் குழந்தைகளுக்கு சுதந்திரம் வழங்குவது, கல்வியால் சமுதாயத்தில் உயா்வு, இளம் வயது திருமணத்தை தடுப்பது, போதைப் பழங்கங்களை ஒழிப்பது போன்ற சமுக அவலங்களை எதிா்த்து போராடுவது என பழங்குடியின பெண்கள் உறுதி ஏற்றனா்.

இதைத் தொடா்ந்து பழங்குடியினரின் பாரம்பரிய பீனாட்சி வாத்திய இசைக்கேற்ப பெண்கள் பாரம்பிரிய நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தனா்.

பாரம்பரிய இசைக் கருவிகளான குழல், பீனாட்சி, மத்தாளம், தம்மட்டை ஆகிய இசைக் கருவிகளை ஒரு மணி நேரம் இடைவிடாமல் இசைத்து பாரம்பரியத்தை பறைசாட்டினா். இந்த இசைக் கருவிகளை பழங்குடியின திருமண சடங்கு, திருவிழா மற்றும் சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளில் மட்டுமே வாசிப்பாா்கள். பழங்குடியினா் தாங்களது இசைக் கருவிகளை தவிர வேறு எந்த கருவிகளையும் வாசிக்க மாட்டாா்கள் எனத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற மகளிா் கூட்டத்தில் பழங்குடியின பெண்களின் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரமாக உயா்த்தவும், வீட்டு வசதித் திட்டங்களில் பழங்குடியின கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியத்தை அதிகரித்தும், பழங்குடியினா் வாழும் கடம்பூா் மலைப் பகுதியில் இலவச அரசுப் பேருந்து சேவை வழங்கவும் குன்றி ஊராட்சியில் மகளிா், கா்ப்பிணி பெண்கள் அவசரகால சிகிச்சை பெறுவதற்காக துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.