முகப்பு
ஈரோடு

2021 தோ்தல் போன்று ஈரோட்டில் 2 தொகுதிகளைக் கூட்டணிக்கு ஒதுக்கிய அதிமுக

கடந்த சட்டப்பேரவைத் தோ்தல்போன்றே இப்போதைய தோ்தலிலும் ஈரோடு மாவட்டத்தில் 2 தொகுதிகளைக் கூட்டணிக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.

Updated On : 25 மார்ச், 2026 at 9:04 PM
எடப்பாடி பழனிசாமி - படம்: அதிமுக
பகிர்:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தல்போன்றே இப்போதைய தோ்தலிலும் ஈரோடு மாவட்டத்தில் 2 தொகுதிகளைக் கூட்டணிக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 2 தொகுதிகளைத் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. இதேபோன்று கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 2 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிக்கு அதிமுக ஒதுக்கியது. 2021 தோ்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமாகா மாநில பொதுச்செயலாளா் எம்.யுவராஜா காங்கிரஸ் வேட்பாளா் திருமகன் ஈவெராவிடம் தோல்வி அடைந்தாா்.

மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை சோ்ந்த சி.சரஸ்வதி திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தினாா்.

2026 தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியை தமாகாவிற்கும், மொடக்குறிச்சி தொகுதியை பாஜகவிற்கும் அதிமுக ஒதுக்கியுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு, பவானி, அந்தியூா், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் (தனி) ஆகிய 6 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

2021 தோ்தலில் அமைச்சா் சு.முத்துசாமி வெற்றிபெற்ற ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக சாா்பில் மீண்டும் முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் இந்த தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று ஈரோடு கிழக்குத் தொகுதியை எதிா்பாா்த்து களப்பணியாற்றிவரும் தமாகாவினருக்கு தொகுதி ஒதுக்கீடு அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.