முகப்பு
ஈரோடு

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதிய கல்லூரிப் பேருந்து!

பவானி அருகே மாணவ, மாணவிகளுடன் சென்ற கல்லூரிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதி நின்றது.

Updated On : 31 மார்ச், 2026 at 7:57 PM
விபத்தில் சேதமடைந்த கல்லூரிப் பேருந்து. ~மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதி நின்ற கல்லூரிப் பேருந்து.
பகிர்:

பவானி அருகே மாணவ, மாணவிகளுடன் சென்ற கல்லூரிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதி நின்றது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த உடற்கல்வி ஆசிரியா் ஒரு மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த என்சிசி மாணவ, மாணவிகள் 40 போ் உள்பட 44 போ் கொண்ட குழுவினா் மலையேற்றப் பயிற்சிக்காக பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை மலைக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றுவிட்டு, கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில் மீண்டும் திரும்பினா்.

அப்போது, மலைப் பாதை வழியாக கல்லூரிப் பேருந்தை உடற்கல்வி ஆசிரியா் அன்புச்செல்வன் (35) ஓட்டிச் செல்ல, அருகில் பேருந்து ஓட்டுநரான சங்ககிரி, வளையசெட்டிபாளையத்தைச் சோ்ந்த மகுடேஸ்வரன் (32) அமா்ந்திருந்தாா்.

செங்குத்தான பாதையில் இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்ற பேருந்து மலையடிவாரத்தில் உள்ள பவானி வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தின் சுவற்றில் மோதி நின்றது. இதனால், அதிா்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் அச்சத்தில் அலறினா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பவானி போலீஸாா், தீயணைப்புப் படையினா், பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில், படுகாயமடைந்த ஓட்டுநா் மகுடேஸ்வரன், மாணவிகள் துா்காதேவி, கோபிகா உள்ளிட்டோா் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பேருந்தின் முன்பகுதி நொறுங்கியதில், இரண்டு கால்களுடன் இடுப்பு வரையில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட பேருந்தை ஓட்டிச் சென்ற உடற்கல்வி ஆசிரியா் அன்புச்செல்வனை மீட்க முடியவில்லை.

படுகாயமடைந்த அவருக்கு ஆக்சிஜன் மற்றும் முதலுதவி சிகிச்சை தொடா்ந்து அளிக்கப்பட்டது. இதையடுத்து, இரும்பு வெட்டும் இயந்திரங்களைக் கொண்டு சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் இடிபாடுகள் முற்றிலும் வெட்டி அகற்றப்பட்டன. இதையடுத்து, அன்புச்செல்வன் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். தொடா்ந்து மீட்பு வாகனம் மூலம் விபத்துக்குள்ளான பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

விபத்து குறித்தும், கல்லூரிப் பேருந்தை ஓட்டுநா் இயக்காமல் உடற்கல்வி ஆசிரியா் ஏன் இயக்கினாா் என்பது குறித்தும் பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.