நீலகிரி

சில்வர் ஓக் மரங்களை வெட்டும் பணி தற்போதைக்கு இல்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி

DIN

கூடலூரில் உள்ள டான்டீ நிறுவனத்துக்குச் சொந்தமான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்வர் ஓக் மரங்கள், ஈட்டி மரங்களை வெட்டும் பணி தற்போதைக்கு இல்லை என்றும்,
முதிர்ந்த மரங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணிதான் தற்போது நடைபெறுவதாகவும் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
குன்னூர் டான் டீ நிறுவன தலைமை அலுவலத்துக்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
டான்டீ நிறுவனத்துக்குச் சொந்தமான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்வர் ஒக் மரங்கள் மற்றும் ஈட்டி மரங்களை வெட்ட முடிவு செய்து, அதனை ஆன்லைன் டெண்டர்விட வனத் துறை அமைச்சர் அளவில் விவாதிக்கப்படுவதாக தேயிலைத் தோட்டக் கழக அதிகாரிகளே கூறி வருகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றும்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வயது முதிர்ந்த சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதற்கு முக்கியக் காரணம், மிக முதிர்ச்சி அடைந்த மரங்களால் தேயிலைச் செடிகளுக்கு கொப்பள நோய் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவே மரங்கள் வெட்டப்படுகின்றன. தனியார் தேயிலைத் தோட்டங்களில் 6 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் ஆன சில்வர் ஓக் மரங்கள் வெட்டப்படுகின்றன. எனவே, உற்பத்தியைப் பெருக்க வயது முதிர்ச்சி அடைந்த சில்வர் ஓக் மரங்களைக் கண்டறிந்து, வெட்டுவது அவசியமாகும். இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு கூறியது வேடிக்கையாக உள்ளது. தேயிலைத் தோட்டக் கழகம் தோற்றுவித்த காலத்திலிருந்து இதுவரை சில்வர் ஓக் மரங்கள் வெட்டப்படவில்லை. 2014-15இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, முதல் முறையாக
சில்வர் ஓக் மரங்களை வெட்ட அனுமதி வழங்கியது. உபாசி அமைப்பும், சில்வர் ஓக் மரங்கள் சரியான நேரத்தில் வெட்டப்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கொப்பள நோயால் தேயிலை உற்பத்தி 40 சதவிகிதம் பாதிப்படைகிறது. மரங்களின் அடர்த்தி விகிதம் சரியான விகிதத்தில் பராமரித்து, பாதுகாக்கப்படும். எனவே, தேயிலை உற்பத்திப் பெருக்கத்துக்காகவே சில்வர் ஓக் மரங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய நாற்றுகள் வனத் துறையின் மூலம் நடவு செய்யப்படும்.
உள்ளாட்சித் துறை அனுமதி கொடுத்து வனப் பகுதியில் சொகுசு பங்களாக்கள்கட்டப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் மீது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், வன விலங்குள் குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றன. இதனால், மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. வனப் பகுதியில் தண்ணீர் இல்லாத இடங்களில் தண்ணீர் வழங்குதவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காட்டுப் பன்றிகள், விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் உண்டாக்கி வருவதாகப் புகார் வந்துள்ளது. இதனைத் தடுக்க, பிற மாநிலங்களில் உள்ளதுபோன்று, காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக வனத் துறை அதிகாரிகள், கேரளம், கர்நாடகம், ஜார்க்கண்ட்,
உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். மாவட்ட வன அலுவலர்கள், வனச் சரகர்கள் ஆகியோர் மட்டுமே காட்டுப் பன்றிகளைச் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், காட்டெருமைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மு.க.ஸ்டாலினின் முதல்வர் ஆசைக்கு நாங்கள்
பொறுப்பல்ல... டிடிவி தினகரன், தற்போதுள்ள அரசை 420 எனக் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு அவரே மறுப்புத் தெரிவித்துள்ளார். கூட்டத்தினர் மத்தியில் பேசும்போது கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். எங்கள் பக்கம் 132 எம் எல்ஏ-க்கள் உள்ளனர். எதிர்க் கட்சித் தலைவர் முக ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் ஆசை உள்ளது. அந்த ஆசைக்கு நாங்கள் பொறுப்பல்ல. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் சந்திப்போம் என்று முதல்வர் கூறிவிட்டார். கடந்த முறை போலவே இந்த முறையும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும் என்றார்.
தலைமை வனப் பாதுகாவலர் துரைராஜ், மாவட்ட வன அலுவலர் கலாநிதி, டான்டீ நிர்வாக இயக்குநர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவா, தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயராமன், ராயப்பன், நகர்மன்ற முன்னாள் தலைவர் சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT