நீலகிரி வனத் துறையின் அதிவிரைவு செயல் பிரிவு குழுவுக்கு புதிய வாகனங்கள்
நீலகிரி மாவட்டத்திலுள்ள வனத்துறையின் அதிவிரைவு செயல் பிரிவு குழுவினரின் பணிகளுக்காக புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள வனத்துறையின் அதிவிரைவு செயல் பிரிவு குழுவினரின் பணிகளுக்காக புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிவிரைவு செயல் பிரிவுக் குழுவினர் பணிகளுக்காக அதி விரைவு வாகனங்கள் 2 வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாட்டினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு பகுதிகள் வனப்பகுதியாக உள்ளன. எனவே, மனித- விலங்கு மோதல் மற்றும் பயிர் சேதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க புதிதாக 12 உறுப்பினர்களைக் கொண்ட அதிவிரைவு செயல் பிரிவுக் குழு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக 0423-2440968 என்ற முழு நேர இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2 வாகனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் மனித, வன விலங்கு மோதல் மற்றும் பயிர் சேதம் போன்ற பாதிப்புகளிலிருந்து தங்களையும், தங்களின் விவசாய நிலங்களையும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாதுகாத்து கொள்ளலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர்கள் ராஜ்குமார், கலாநிதி, அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.