சில்வர் ஓக் மரங்களை விற்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்: சிறு விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளே சில்வர் ஓக் மரங்களை தங்கள் தேவைக்கு அறுத்து விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்று சிறு விவசாயிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளே சில்வர் ஓக் மரங்களை தங்கள் தேவைக்கு அறுத்து விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்று சிறு விவசாயிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கோத்தகிரியில் அதன் தலைவர் தும்பூர் போஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளர் குள்ளாகவுடர், துணைத் தலைவர்கள் பெள்ளிகவுடர், அருணா, ஹாலாகவுடர், செயலாளர் பசுவராஜ், கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆண்டி கவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் படுகர், தொதவர்கள், கோத்தர்கள், இருளர்கள், குருமர்கள் காட்டு நாயக்கர் மற்றும் பலதரப்பட்ட ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெருப்பாலானோர் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் விவசாயம் செய்து அனுபவ பாத்தியத்தில் வைத்துள்ள நிலம் இன்னும் அவர்களுக்குப் பதிவு செய்து பட்டா கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே, சுமார் 15 ஆண்டுகள் விவசாயம் செய்து அனுபவ பாத்தியம் உள்ளவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் வன விலங்குகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளார்கள். காட்டு மிருகங்களின்அச்சுறுத்தலில் இருந்து இம்மாவட்ட மக்களை காப்பாற்ற ரப்பர்குண்டு துப்பாக்கி வழங்க வேண்டும்.
சிறு விவசாயிகளின் கூட்டுப் பட்டா நிலங்களை விலைக்கு வாங்கும் சிலர், பக்கத்தில் உள்ள விவசாய நிலத்துக்குச் செல்லும் நடைபாதையை மின்வேலி அமைத்து ஆக்கிரமித்து இடையூறு செய்து வருகின்றார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.
மாவட்ட விவசாயிகள் அரசு வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடன் மற்றும் மலர்ச் சாகுபடிக்காகப் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சிறு விவசாயிகள் தங்கள் தேயிலைத் தோட்டங்களில் ஊடு பயிராக சில்வர் ஓக் மரத்தை வளர்த்துள்ளனர். தங்களின் சுய தேவைக்கு இந்த மரங்களை விற்பதற்கு வைப்பு நிதியாக ரூ. செலுத்த வேண்டும் என்பதை தற்போது ரூ. 500 ஆக உயர்த்தியுள்ளார்கள். எனவே வைப்பு நிதியை ரத்து செய்து விவசாயிகளே இந்த மரங்களை அறுத்து விற்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.