நீலகிரி

கஜா புயலின் தாக்கம்: நீலகிரியில் பரவலாக மழை

DIN

கஜா புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன்,  கடுமையான மேக மூட்டமும் நிலவி வருவதால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவ மழைக் காலம் முடிவுக்கு வந்த பின்னர் பனிக் காலம் தொடங்கியிருந்தது. சில பகுதிகளில் உறை பனியும் கொட்டத் தொடங்கியிருந்தது. 
இருப்பினும் மாவட்டத்தின் பிற பகுதிகளான குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை எதிர் நோக்கியிருந்த சூழலில் கஜா புயலின் தாக்கத்தின் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பலத்த காற்றும், கடுமையான மேக மூட்டமும் நிலவி வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. தொடர் மழையின் காரணமாகவும், குளிரின் காரணமாகவும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுலா மையங்களிலும்  சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டன.
 மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி  நேரத்தில் உதகையில் அதிகபட்சமாக 21 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.  
அதேபோல பிறபகுதிகளில் பதிவான மழை விவர அளவு (மில்லி மீட்டரில்):
மேல்பவானி,  அவலாஞ்சி, நடுவட்டம், குந்தா தலா 2, எமரால்டு 3,  கோத்தகிரி 5, கேத்தி 11, கிளன்மார்கன் 12 ,   கல்லட்டி 19 என மழை பதிவாகியிருந்தது. இது பகலில் வலுத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணி  வரையிலும் உதகையில் அதிக அளவாக 20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.  
அதேபோல, கூடலூர் 1, கிண்ணக்கொரை 2, அவலாஞ்சி, கெத்தை தலா 4, குந்தா, எமரால்டு, கேத்தி, கல்லட்டி தலா 5, மேல்பவானி, நடுவட்டம் தலா 6, குன்னூர் 10, கோத்தகிரி12 ,  கிளன்மார்கன் 17 மி.மீ மழை பதிவாகியிருந்தது.  
உதகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து வீசிய பலத்த காற்றின் காரணமாக உதகையிலுள்ள ராஜ்பவன் மாளிகை வளாகத்தில் உள்ள பெரிய மரம் வியாழக்கிழமை நள்ளிரவில்  வேருடன் சாய்ந்தது. அதேபோல, உதகை பெர்ன்ஹில் பகுதியில் வெள்ளிக்கிழமை விழுந்த மரத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு,  உதகை நகரம்  முழுதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மாலை 6 மணிக்கு பின்னரே மின் விநியோகம் சீரடைந்தது. 
உதகையில் கடுமையான மேகமூட்டத்தின் காரணமாக பகல்  நேரமே இரவு போல இருண்டு காணப்படுவதால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கின்  உதவியுடனேயே இயக்கப்பட்டன. அத்துடன் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT