முகப்பு
நீலகிரி

மஞ்சூர்-கோவை சாலையில் யானைகள் நடமாட்டம்

மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் நடமாட்டத்தால், பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:15 AM
பகிர்:

மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் நடமாட்டத்தால், பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 
மஞ்சூர்- கோவை சாலையில் கெத்தை நீர் மின்நிலையம் உள்ளது. இதையொட்டி மின்வாரிய அலுவலர், ஊழியர் குடியிருப்புடன் பலதரப்பு மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றிலும் விவசாயிகள் பாக்கு, வாழை, மலைக் காய்கறிகளைப் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. 
இந்த யானைகள் விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. மேலும் கெத்தை அருகே முள்ளி பகுதியை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதியில் இருந்து, உணவும் குடிநீரும் தேடி ஏராளமான காட்டு யானைகள் இடம் பெயர்ந்து தமிழக பகுதிகளில் ஊடுருவி உள்ளன.  
இந்த யானைகள் கெத்தை, முள்ளி, மானார், அத்திக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் நடமான் சாலையில் ஆங்காங்கே நின்று அவ்வழியாகச் சென்றுவரும் அரசுப் பேருந்துகள், வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.  
எனவே, யானைகளின் நடமாட்டத்தால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறை அறிவுறுத்தி உள்ளது.   இது குறித்து குந்தா வனச்சரகர்  சரவணன் கூறியதாவது:
சாலைகளில் யானைகளைக் கண்டவுடன் வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். பயணிகள் கீழே இறங்கி யானைகளைப் பார்த்து சத்தமிடுவது, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடக் கூடாது. 
வாகனங்கள் மூலம் யானைகளைப் பின்தொடர்தல், அவற்றை விரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.