கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பான அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பான அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பான விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வரை மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவா் மதுரை மாவட்ட நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக கோவை மாவட்ட கூடுதல் நீதிபதியாக உள்ள சஞ்சய் பாபா நீலகிரி மாவட்டத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் தனது பொறுப்புகளை டிசம்பா் 21ஆம் தேதிக்குப் பிறகு ஏற்கவுள்ளாா்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயன், மனோஜ், ஜித்தின் ஜாய் ஆகிய மூவா் மட்டுமே நேரில் ஆஜராகியிருந்தனா். எஞ்சி 7 போ் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பா் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டாா்.