122 பயனாளிகளுக்கு ரூ.17.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
உதகையில் நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் 122 பயனாளிகளுக்கு ரூ.17.60 லட்சம் மதிப்பில் பல்வேறு தொழில்கள் தொடங்க காசோலைகள் மற்றும் உலமாக்களுக்கு உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன.
உதகையில் நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் 122 பயனாளிகளுக்கு ரூ.17.60 லட்சம் மதிப்பில் பல்வேறு தொழில்கள் தொடங்க காசோலைகள் மற்றும் உலமாக்களுக்கு உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் கெளசல்யா பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அரசுக்கு ஆன்லைனில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உலமா மற்றும் இதர பணியாளா்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்கப்பட்டு, 521 போ் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த டாம்கோ நிறுவனம் மூலம் தனிநபா் கடன், குழுக் கடன் மற்றும் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் சங்கம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகங்களில் வழங்கலாம் என்றாா்.
மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா் ஸ்ரீதா், கிறிஸ்துவ மகளிா் உதவும் சங்க இணைச் செயலா் கேத்ரின், மாவட்ட காஜி முஜிபூா் ரஹ்மான், உதகை சமூக சேவை நிறுவன இயக்குநா் சாலமன், திபெத் சமூக நலத் தலைவா் செம்பா ஆகியோருடன் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மகளிா் உதவும் சங்க உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.