திமுக மிரட்டியதா? தொகுதிகளை குறைத்தது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் பேட்டி!
ஆளும் கூட்டணிக் கட்சியான திமுக மிரட்டியதா? தொகுதிகளை குறைத்தது ஏன்? என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் வீரபாண்டியன் பேட்டியளித்துள்ளதைப் பற்றி...
ஆளும் கூட்டணிக் கட்சியான திமுக மிரட்டியதா? தொகுதிகளை குறைத்தது ஏன்? என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் வீரபாண்டியன் பேட்டியளித்துள்ளார்.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை நடத்த பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒரு இடங்கள் குறைத்து 5 தொகுதிகள் இன்று (மார்ச் 18) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்துக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “மக்களவைத் தேர்தல், பேரவைத் தேர்தல்களில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், கம்யூனிஸ்டுகள் தங்களது உரிமைகளை, அரசியல் கடமைகளைக் கடந்து சென்றதில்லை.
அந்த வகையில், மக்களவையில், சட்டப்பேரவையில் உழைக்கும் மக்களின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலும் அங்கு ஒலிக்கப்பட வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் எப்போது பாதிக்கப்பட்டாலும், அங்கு கம்யூனிஸ்ட்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் நாங்கள் கூட்டணி அமைக்கிறோம். பேச்சுவார்த்தைகளை நடத்துகிறோம். திமுகவுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம்.
கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டோம். அதைவிட கூடுதலாக வேண்டும் என்று கேட்டோம். அதற்கான தார்மிகம் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கிறது. நாடு முழுவதும் நிலைபெற்று குழுவாக, இயக்கமாக, கட்சியாக இருக்கிறோம். முதல்வரைச் சந்தித்தோம்.
பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கின்ற காரணத்தால், நாங்கள் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) உள்பட எல்லோரும் தொகுதிகளைக் குறைத்துக் கொண்டுள்ளோம். எனவே, நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டுமென முதல்வர் கோரிக்கை வைத்தார். அதனாலேயே, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 18) தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம்.
ஐந்து, ஆறு இடங்களில் போட்டியிடுவது கட்சிகளை சோர்வடையச் செய்யும். தமிழ்நாட்டைச் சிதைக்க முயலும் பாஜக மற்றும் அதன் கூட்டணியை வீழ்த்துவதுதான் எங்கள் முதன்மை இலக்கு. எங்கள் அரசியல் நிலையில் இருந்து தவறிச் செல்ல மாட்டோம். இந்தியாவில் உள்ள ஒற்றுமையை பாஜக சிதைக்க நினைக்கிறது. அந்த ஜனநாயகப் போரில் நாங்கள் பங்கேற்றுள்ளோம்.
நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. திமுக ஒருபோதும் எங்களை நிர்பந்திக்கவில்லை. வேண்டுகோள்தான் விடுத்தார்கள். கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால், நீங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று முதல்வரே கேட்டுகொண்டார். அவர் எங்களை நிர்பந்திக்கவில்லை. கட்டளையிடவில்லை. அழுத்தம் தரவில்லை. நான்கு கட்ட பேச்சுவார்த்தையில் சுயமரியாதை பாதிக்கப்பட்டிருந்தால், கம்யூனிஸ்ட் கட்சி கடந்து சென்றிருக்கும்” என்றார் மு. வீரபாண்டியன்.