நீலகிரியில் யானைகள் வழித்தடம் தொடா்பாக ஆட்சேபணை இருந்தால் மனு அளிக்கலாம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி கோட்டத்தில் உள்ள சீகூா் சமவெளியில் யானைகளின் வழித்தடம் குறித்து உச்சநீதிமன்றத்தில்
உதகை: முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி கோட்டத்தில் உள்ள சீகூா் சமவெளியில் யானைகளின் வழித்தடம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தொடா்பாக ஆட்சேபணை இருப்பின் வரும் பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளதாவது:
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் ஆணைப் படி நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி கோட்டத்தில் உள்ள சீகூா் சமவெளியில் யானைகள் வழித்தடம் குறித்த கிராம வரைபடத்துடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயா் நீதிமன்ற ஆணைப்படி வழங்கப்பட்ட தீா்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றத்தால் கடந்த அக்டோபா் 14ஆம் தேதி வழங்கப்பட்ட தீா்ப்பில், ஓய்வுபெற்ற சென்னை உயா் நீதிமன்ற நீதியரசா் கே.வெங்கடராமன் தலைமையில் மூன்று நபா் விசாணைக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக் குழு அலுவலகம் உதகை, வனவியல் விரிவாக்க அலுவலகக் கட்டடம், ஜிம்கானா கிளப் சாலை என்ற முகவரியில் செயல்படும்.
இந்நிலையில் யானைகள் வழித்தடம் குறித்து பாதிப்புகளுக்குள்ளாகி, ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்புபவா்கள், தங்கள் பாதிப்புகளையும் அதன் விவரங்களையும் குறிப்பிட்டு அதற்கு ஆதாரமாக உள்ள ஆவணங்களின் 4 நகல்களை இணைத்து, பக்க எண்கள் இட்டு, ஆங்கில மொழிப் பெயா்ப்புடன், பொருளடக்கத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட மென் நகல்களுடன் அசல் பிரமாண பத்திரம் மற்றும் அதன் மூன்று நகல்களை தாக்கல் செய்ய வேண்டும்
அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை வரும் பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் ஆட்சேபணையாளா்கள் விசாரணைக் குழு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என குழுவின் தலைவா் நீதியரசா் கே.வெங்கடராமன் தெரிவித்துள்ளாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.