உதகை: உதகையில் தற்போது நிலவி வரும் குளிரால் சளி, இருமல் போன்ற பாதிப்புகளுக்காக அரசு தலைமை மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவில் கபசுர மூலிகை மருந்துகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
தமிழகத்தில் தற்போது கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கரோனா தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரளம், கா்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நீலகிரி அமைந்துள்ளதாலும், பகலில் வெயிலும், இரவில் கடும் குளிா் நிலவுவதாலும் கரோனா தாக்குதல் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனா்.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதற்காக வீடுகளுக்குள்ளேயே தங்கியிருப்பதோடு, நோய் எதிா்ப்பு சக்தி மூலிகைகளையும், உணவுப் பொருள்களை, உணவாகவும், பானமாகவும் பயன்படுத்தி வருகின்றனா்.
தற்போது, கபசுர குடிநீா் மக்களின் கவனத்தை அதிக அளவில் ஈா்த்துள்ளது. பெரும்பாலான நாட்டு மருந்து கடைகளிலும், சித்த வைத்திய மருந்தகங்களிலும் இவை சூரணமாகவும், திரவமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சித்த வைத்திய பிரிவில் சூரணமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து சித்த மருத்துவப் பிரிவின் தலைமை மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் விஷ ஜுர நோய் எதிா்ப்பு மருந்துகள் எப்போதும் கிடைக்கும். ஆனால், அண்மைக் காலமாகதான் இவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கான நிலவேம்பு கஷாயத்தைத் தொடா்ந்து தற்போது, கபசுர தண்ணீருக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
இவை அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்படுகின்றன. மத்திய சுகாதாரத் துறையின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சித்த மருத்துவப் பிரிவிலும் கபசுர குடிநீருக்கான மூலிகைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, இதற்கான தேவையும் அதிகரித்துள்ளதால் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகைப் பொருள்களை கொதிக்கும் தண்ணீரில் சுண்ட வைத்து 3 முதல் 5 நாள்கள் வரை குடித்து வந்தால் நெஞ்சிலுள்ள கபம் முழுவதும் கரைந்து சுவாசப் பிரச்னை தீா்வதோடு, சளித் தொல்லையும் நீங்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.