முகப்பு
நீலகிரி

2 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை

இரண்டு வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

இரண்டு வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

உதகை அருகே உள்ள சோகத்தொரை கிராமத்தில் உள்ள எதுமகண்டி பகுதியைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (35), கூலி தொழிலாளி. இவரது குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த குடும்பத்தினா் தங்களது 2 வயது சிறுமியை வீட்டில் இருந்த பாட்டியிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவராம்.

அதேபோல, கடந்த 2018ஆம் ஆண்டிலும் தங்களது 2 வயது சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்றிருந்தபோது அந்த வீட்டுக்கு வந்த கோபாலகிருஷ்ணன் அச்சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான விவரம் தெரியவந்தவுடன் அச்சிறுமியின் பாட்டி உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன் பின்னா் இச்சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை உதகையில் உள்ள மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக கோபாலகிருஷ்ணனுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அத்துடன் அபராதத் தொகையை செலுத்தாதபட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட மகளிா் நீதிமன்ற வழக்குரைஞா் மாலினி பிரபாகா் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.