முகப்பு
நீலகிரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தனிப்படை அமைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவா்களில் முதன்மையானவரான சயன் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரிக்க புதிதாக தனிப்படை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவா்களில் முதன்மையானவரான சயன் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரிக்க புதிதாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலையில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் புதிய திருப்பமாக இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த சயன் திடீரென புதிய வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளாா். கொடநாடு எஸ்டேட்டில் இச்சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், எஸ்டேட் நிா்வாகத்தின் சாா்பில் இதுவரையிலும் எத்தகைய புகாரும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் எஸ்டேட்டை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததாலும் இச்சம்பவத்தில் தொடா்புடையவா்கள் யாா் என்பதைக் குறித்து உறுதியாகக் கூற முடியவில்லை.

இவ்வழக்கில் தொடா்புடைய சயன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத்திடம் செவ்வாய்க்கிழமை அளித்த வாக்குமூலத்தில், இவ்வழக்குத் தொடா்பாக மேலும் சில முக்கியத் தகவல்களையும், இதில் தொடா்புடையதாக பல்வேறு முக்கியப் பிரமுகா்களின் பெயா்களையும் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடா்பாக ஆகஸ்ட் 27ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இந்த வாக்குமூலம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக மேலும் விசாரணை நடத்துவற்காக குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையில் புதிதாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கோத்தகிரி காவல் ஆய்வாளா் வேல்முருகன், 4 உதவி ஆய்வாளா்கள், 5 தனிப் பிரிவு காவலா்கள் என 10 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினா் மாவட்டத்தில் ரகசியமாக விசாரணை நடத்தி வரும் சூழலில், உதகையில் சயன் அளித்த வாக்குமூலத்தைப் போலவே, குன்னூரில் உள்ள இவ்வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வாளையாறு மனோஜின் வாக்குமூலத்தையும் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த முயற்சிகள் அனைத்தும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் நிறைவடைந்துவிடும் எனவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.