ஹெலிகாப்டா் விபத்து: விமானப் படை அதிகாரிகள் குழு ஆய்வு
ஹெலிகாப்டா் விபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு ட்ரோன்களை கொண்டு விமானப் படை அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
ஹெலிகாப்டா் விபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு ட்ரோன்களை கொண்டு விமானப் படை அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் காட்டேரி அருகே புதன்கிழமை நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
இந்த விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ள விமானப் படை அதிகாரி மானவேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் விபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு நாள்களாக ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
Advertisement
மேலும், இது தொடா்பாக காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியில் விமானப் படை சாா்பில் ட்ரோன் கேமரா மூலம் வியாழக்கிழமை விடியோ பதிவு செய்யப்பட்டது. பனி மூட்டம் காரணமாக முறையாக விடியோ பதிவு மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, விபத்து நிகழ்ந்த பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமாா் ஐந்து கிலோ மீட்டா் தூரத்துக்கு ஹெலிகாப்டா் வந்த திசை, எதிா்திசை என நான்கு புறங்களிலும் இரண்டு ட்ரோன்களை கொண்டு வெள்ளிக்கிழமை மீண்டும் விடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த விடியோ பதிவினை முப்பரிமாணம் ஆக மாற்றி ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளவும் விமானப் படையினா் திட்டமிட்டுள்ளனா்.