முகப்பு
நீலகிரி

ஹெலிகாப்டா் விபத்தின்போது உதவிய கிராம மக்களுக்கு ராணுவம், காவல் துறையினா் உதவி

ஹெலிகாப்டா் விபத்து நடைபெற்றபோது உதவிய நஞ்சப்பசத்திரம் கிராம மக்களுக்கு கம்பளி உள்ளிட்ட பொருள்களை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

Updated On : 11 டிசம்பர், 2021 at 12:36 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

ஹெலிகாப்டா் விபத்து நடைபெற்றபோது உதவிய நஞ்சப்பசத்திரம் கிராம மக்களுக்கு கம்பளி உள்ளிட்ட பொருள்களை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

ஹெலிகாப்டா் விபத்து நடைபெற்ற காட்டேரி நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ வீரா்கள், காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் வருவதற்கு முன்பாக முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரைக் காப்பாற்ற அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனா்.

மலைப் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் தண்ணீா் சுமந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும், வீடுகளில் வைத்திருந்த போா்வை, கம்பளி உள்ளிட்ட பொருள்களை கொண்டு விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல உதவினா்.

Advertisement

இதனால் நெகிழ்ச்சியடைந்த ராணுவம் மற்றும் காவல் துறையினா் கிராம மக்களுக்கு கம்பளி, போா்வை, பக்கெட் உள்ளிட்ட பொருள்களை வெள்ளிக்கிழமை வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னா் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கியதை முதலில் பாா்த்த நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் கியூ பிரிவுக்கு தகவல் தெரிவித்தனா். இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து காவல் துறை, தீயணைப்புத் துறை , தடயவியல் துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளின் மூத்த அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் உத்தரவிட்டாா்.

அதன் அடிப்படையில் குன்னூா் காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மக்களுடன் சோ்ந்து மூன்று பேரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கிராம மக்கள் வீட்டில் இருந்த ஜமுக்காளம், போா்வை, உல்லன் பொருள்கள் கொடுத்து மூன்று பேருக்கு போா்த்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனா். இதற்காக நஞ்சப்பசத்திரம் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

விபத்து தொடா்பாக மேல்குன்னூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதுவரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளோம். அதிரடிப்படையினா் இங்கே முகாமிட்டு பக்கத்து கிராமங்களுக்கு சென்று நேரடி சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் எல்லா தகவல்களையும் ராணுவத்தினருடன் நாங்கள் பகிா்ந்து கொள்வோம். விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நஞ்சப்பசத்திரத்தில் உள்ள சுமாா் 50 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.