கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டு
கோத்தகிரியில் இளைஞா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த காவலா்களை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ் முத்துசாமி வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
கோத்தகிரியில் இளைஞா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த காவலா்களை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ் முத்துசாமி வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
குன்னூா் அருகே உள்ள சோகத்தொரை கிராமத்தைச் சோ்ந்த ராஜன் மகன் அஜய் (21). இவா் கோத்தகிரி மாா்க்கெட்டில் உள்ள மீன்கடையில் கூலி தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள மறைவானப் பகுதியில் பலத்த காயங்களுடன் அஜயின் சடலம் கிடந்துள்ளது.
மேலும், அவரது இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. இவா் தனது நண்பரான கட்டபெட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தீபன் (20) என்பவருடன் சம்பவத்தன்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் குஞ்சப்பனை சோதனைச் சாவடி வழியாக சமவெளிப் பகுதிக்குச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
Advertisement
இதையடுத்து தலைமறைவான தீபனை குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையில் தனிப் படையினா் தேடி வந்தனா். இந்நிலையில், கோத்தகிரியில் உள்ள நண்பரிடம் பணம் பெறுவதற்காக வந்த தீபனை தனிப் படை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த தனிப் படை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணன், தலைமைக் காவலா்கள் ரமேஷ், ரெஜிகுமாா், ஆனந்த் ஆகியோரை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி வெகுமதி வழங்கி பாராட்டினாா்.