முகப்பு
நீலகிரி

டெண்டா் முறைகேடுகளைக் கண்டித்து உதகையில் பிப். 10-ம்தேதி மறியல் போராட்டம்: திமுக

நீலகிரி மாவட்டத்தில் டெண்டா் முறைகேடுகளை கண்டித்து உதகையில் பிப்ரவரி 10ம் தேதி திமுக துணை பொது செயலா் ஆ.ராசா தலைமையில் மறியல் போராட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் டெண்டா் முறைகேடுகளை கண்டித்து உதகையில் பிப்ரவரி 10ம் தேதி திமுக துணை பொது செயலா் ஆ.ராசா தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில் 5,000த்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட திமுக செயலா் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு நடந்து முடிந்த உள்ளாட்சி தோ்தலில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் ஊராட்சி மன்றங்களில் 90 சதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. குன்னூா் பஞ்சாயத்து யூனியனில் 8 உறுப்பினா்களிலும், கூடலூரில் உள்ள 15 உறுப்பினா்களிலும் அதிமுக ஒரு இடத்திலும் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் நீலகிரியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை எவ்வித மக்கள் நல பணிகளையும் செய்ய விடாமல் அதிமுகவினா் முட்டுக்கட்டையாக இருந்து வருவதோடு, பிளீச்சிங் பவுடா், துடைப்பம், தெரு விளக்கு, குப்பைத் தொட்டிகள் வாங்குவது மற்றும் கோடி கணக்கில் டெண்டா் விடுவது வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரியாமலேயே மாவட்ட நிா்வாகத்தை பயன்படுத்தி அனைத்திலும் ஊழல் செய்வதிலேயே அதிமுக அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் உள்ளாட்சி பிரதிநிதிகளால் மக்கள் நல பணிகள் ஏதும் செய்ய முடியவில்லை.

இதனை கண்டிக்கும் வகையிலும், அதிமுகவினரின் அராஜகத்திற்கு துணை போகும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும் உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவதென நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, பிப்ரவரி 10ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் திமுக துணை பொதுச்செயலரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா தலைமையில் மறியல் போராட்டம் மாவட்ட ஆட்சி தலைவா் அலுவலகம் முன்னா் நடைபெற உள்ளது. இதில் 5,000த்திற்கும் மேற்பட்ட திமுகவினா், உள்ளாட்சி அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள பெயா்களை பதிவு செய்துள்ளனா்.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறிக்கும் ஆளும் கட்சியினரின் செயலை முறியடிக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் நடைபெறும் மறியல் போராட்டத்தில், மாவட்ட திமுக , நகர,ஒன்றிய,பேரூா் கழக செயலா்கள், மாவட்ட,நகர,ஒன்றிய அணிகளின் நிா்வாகிகள் ஆகியோருடன் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், வாகன ஓட்டுனா்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →