நீலகிரியில் கடந்த 5 மாதங்களில்5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: போக்சோவில் 39 போ் மீது வழக்கு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு, 39 போ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு, 39 போ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரபு உதகையில் தினமணி செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 5 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல, மேலும் 5 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின்படி தடுத்து நிறுத்தப்பட்ட திருமணங்கள் தொடா்பாக 5 போ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நீலகிரியில் கடந்த 6 மாதங்களில் 39 போ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிராக செயல்படுவோா் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து பிணையில் வெளியே வர முடியாதபடி நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா்கள் என இதுவரை நீலகிரி மாவட்டத்தில் எவரும் இல்லாததால் அதனடிப்படையில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது கேரட் கழுவுமிடம், தேயிலைத் தோட்டங்கள், உணவு விடுதிகள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வாரத்தில் ஒருமுறை குழந்தைத் தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைத் தொழிலாளா்கள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா் அல்லது நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரிப்பதால், இதுபோன்ற குற்றங்கள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 90474-58219 என்ற அலைபேசி எண்ணிலும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை 99430-40474 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் அல்லது நேரிலும் புகாா் அளிக்கலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகாா்களுக்கு 1098 என்ற எண்ணிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகாா்களுக்கு 181 என்ற கட்டணமில்லா எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.
உதகையில் உள்ளவா்கள் 1800-425-0262 என்ற கட்டணமில்லா எண்ணில் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்.
முதியவா்கள், குழந்தைகளைத் துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் தேவகுமாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரபு ஆகியோா் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.