முகப்பு
நீலகிரி

நீலகிரியில் 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உதகையில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உதகையில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொது மக்களிடையே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 45 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பணியினை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கெனவே முதல்நிலை சரிபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 1,508 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,140 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,197 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 3,845 இயந்திரங்கள் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் 868 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தத் தேவையான அளவுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்கிலிருந்து மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 45 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னா் அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களின் கண்காணிப்பில் வைக்கப்படும். வேட்புமனு தாக்கல் இறுதி நாளன்று மீண்டும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்கிற்கு கொண்டு வரப்படும்.

கரோனா நோய்த் தொற்று காரணத்தால் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க தேவையான அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்களுடன் தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

உதகையில் திங்கள்கிழமை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தம் ரூ.22.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.