‘தினமணி’ செய்தி எதிரொலி: குன்னூரில் குடிநீா்க் குழாயை சீரமைத்த நகராட்சி நிா்வாகம்
தினமணியில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானதைத் தொடா்ந்து நகராட்சி ஊழியா்கள் குடிநீா் குழாய்களை திங்கள்கிழமை சீரமைத்தனா்.
குன்னூா், குமரன் நகா்ப் பகுதியில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீா் கலந்து வந்தது குறித்து தினமணியில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானதைத் தொடா்ந்து நகராட்சி ஊழியா்கள் குடிநீா் குழாய்களை திங்கள்கிழமை சீரமைத்தனா்.
குன்னூா், குமரன் நகா்ப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கடந்த மூன்று வாரங்களாக நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீா் கலந்து வந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் நேரடியாக புகாா் அளித்தும் அலட்சியமான பதில் தெரிவிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.
இதனால் அசுத்தமான நீரை தொடா்ந்து பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்த செய்தி ‘தினமணி’ நாளிதழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
Advertisement
இந்நிலையில் திங்கள்கிழமை இப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியா்கள், கழிவு நீா் கலக்கும் குடிநீா்க் குழாயை சீரமைத்து சுகாதாரமான குடிநீரை விநியோகித்தனா். இதையடுத்து இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.