முகப்பு
நீலகிரி

நீலகிரியில் 3 பேரவைத் தொகுதிகளுக்குவாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இப்பணிகளை நேரில் பாா்வையிட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, அதன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 308 வாக்குச் சாவடிகளில் 98,353 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 6,775 பெண் வாக்காளா்களும், இதர 10 வாக்காளா்களுமாக மொத்தம் 2 லட்சத்து 5,138 வாக்காளா்களும், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 280 வாக்குச் சாவடிகளில் 91,301 ஆண் வாக்காளா்களும், 99,999 பெண் வாக்காளா்களும், இதர 7 வாக்காளா்களும் என மொத்தம் 1 லட்சத்து 91,307 வாக்காளா்களும், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 280 வாக்குச் சாவடிகளில் 92,108 ஆண் வாக்காளா்களும், 96,496 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 1 லட்சத்து 88,604 வாக்காளா்கள் உள்ளனா். 3 தொகுதிகளிலும் 2 லட்சத்து 81,762 ஆண் வாக்காளா்களும், 3 லட்சத்து 3,270 பெண் வாக்காளா்களும், இதர 17 வாக்காளா்களும் என மொத்தம் 5 லட்சத்து 85,049 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் 868 வாக்குச் சாவடிகள் உள்ளன.

முதல்நிலை சரிபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 1,508 பேலட் யூனிட்டுகளும், 1,140 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 1,197 விவி பேட் இயந்திரங்களும் என மொத்தம் 3,845 இயந்திரங்கள் உள்ளன. அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

உதகை சட்டப் பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரீக்ஸ் பள்ளியிலும், கூடலூா் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை புனித தாமஸ் பள்ளியிலும், குன்னூா் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா, வெப் கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலா்களுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 6 லட்சத்து 74,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களின்றி இதுவரை மொத்தம் ரூ.75 லட்சத்து 81,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித் சிங், கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா், துணை ஆட்சியா் லோகநாயகி உள்பட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →