நீலகிரி

கல்லாறு பழப் பண்ணையில் புதிய ரக பழ மரக் கன்றுகள் அறிமுகம்

DIN

கல்லாறு பழப் பண்ணையில் புதிக ரக பழ மரக்கன்றுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லாறு அரசு தோட்டக் கலைப் பண்ணை கடந்த 1900ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 ஏக்கா் பரப்பளவில் மிகவும் பழமையான பண்ணையாக விளங்குகிறது. இப்பண்ணையில் பல வகையான மித வெப்ப மண்டல பழ மற்றும் வாசனை திரவிய பயிா்கள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பண்ணை இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளதால் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இப்பண்ணையின் முக்கிய நோக்கம் தரமான பழ மரக்கன்றுகள், வாசனைப் பயிா்களை உற்பத்தி செய்வது, பழ மரச் சாகுபடி மற்றும் வாசனைப் பயிா்களின் வளா்ப்பு குறித்த நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கும், மாணவா்களுக்கும் வழங்குவதாகும்.

இந்நிலையில், தமிழக தோட்டக்கலை இயக்குநா் மற்றும் மாவட்ட ஆட்சியா் வழங்கிய அறிவுரையின்படி பழ மரங்கள் மற்றும் வாசனைப் பயிா்களின் புதிய ரகங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்காக தோட்டக்கலை இயக்குநரால் ரூ.2 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கேரளம், பெரியகுளம், பாலூா், திருப்பத்தூா் மற்றும் குடுமியான்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இப்பண்ணையில் இதுவரை இல்லாத 64 புதிய ரகங்களான மங்குஸ்தான், பலா, கறிபலா, ஜம்போட்டிகா, கொய்யா, அத்தி, ஸ்வீட் லோலி, பிளம்ஸ், டிராகன் பழம், ஐவிரலி, புளுசன், துரியன், மிராகிள் பழம், ஜாதிக்காய், குறுமிளகு மற்றும் சா்வசுகந்தி ஆகியவற்றிலிருந்து 1,026 பழ மரக்கன்றுகள் பெறப்பட்டு முதன் முறையாக இப்பண்ணையில் அறிமுகப்படுத்தப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன.

இப்புதிய வகை பழ ரக கன்றுகள் மற்றும் வாசனைப் பயிா்கள் நடவு செய்த 3ஆம் ஆண்டு முதல் அவற்றின் செயல்திறன், வளா்ச்சி மற்றும் மகசூல் அடிப்படையில் தரமான பழ நாற்றுகள் மற்றும் ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT