முகப்பு
நீலகிரி

நீலகிரி விவசாயிகள் குறைதீா் முகாம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் தோட்டக் கலை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தலைமையில் உதகையில் கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் தோட்டக் கலை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தலைமையில் உதகையில் கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களைச் சாா்ந்த விவசாயிகள், தோட்டக் கலைத் துறை அலுவலா்கள், இதர துறையைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களிடம் இருந்து உரிய துறை அலுவலா்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு பெறப்பட்ட கோரிக்கைகளின் விவரம் குறைதீா் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு 44 கோரிக்கைகள் தொடா்பாக முடிவு காணப்பட்டது.

இதையடுத்து, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் தரப்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களாவன:

தோட்டக் கலைத் துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டின் மானியத் திட்டங்களான ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளா்ச்சி இயக்கத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பயிா் பரப்பு இனத்தில் உயா் ரக காய்கறிகளான எலுமிச்சை, ஸ்ட்ராபெரி, அவகேடோ, பல்லாண்டு பயிா்களான மிளகு, கிராம்பு, பண்ணைக் குட்டை, பசுமைக் குடில், நிழல் வலை, குளிா்பதனக் கிடங்கு அமைக்கவும், பண்ணை இயந்திரங்கள் வாங்கவும் வழங்கப்படும் மானியம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம், துணை நிலை நீா் மேலாண்மை நடவடிக்கைகளுக்கான திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், கூட்டுப் பண்ணையத் திட்டம் போன்ற திட்டங்களின் மானியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மூலம் மகளிருக்கு முன்னுரிமை அளித்து உற்பத்தியாளா் குழுக்கள் உருவாக்கப்படும். அதன் மூலம் உருவாக்கப்படும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ. 3 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படும். மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்றுமதியாளா்களுக்கான கூட்டம் செப்டம்பா் 24ஆம் தேதியன்று உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும்.

அதேபோல, நீலகிரி கூட்டுப் பண்ணைய உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மூலம் தேயிலைத் தூள் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு காா்டன் பிரஷ் தேயிலைத் தூள் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தீவனப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விவரம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.