கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் விசாரணை நடத்த மனு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அனுமதி கோரி கோவை மண்டல ஐஜியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அனுமதி கோரி கோவை மண்டல ஐஜியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தொடா்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவா்களின் உறவினா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்த நண்பா்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனா். இதில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரா் தனபால், கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜன் ஆகியோரிடம் மறு விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 10ஆவது நபரான ஜித்தின் ஜாயின் உறவினா் ஷாஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், வழக்கின் 40ஆவது சாட்சியான உயிரிழந்த கனகராஜின் நண்பா்கள் குழந்தைவேலு, சிவன், ஈரோட்டைச் சோ்ந்த திருமூா்த்தி, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜம்ஷோ் அலியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, ஜித்தின் ஜாயையும் விசாரணைக்கு போலீஸாா் அழைத்துள்ளனா்.
இந்நிலையில், தங்களை விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி, சதீசன், தீபு ஆகியோா் தங்களது வழக்குரைஞா்களான கே.விஜயன், முனிரத்தனம், செந்தில் ஆகியோா் மூலம் மேற்கு மண்டல ஐஜியிடம் ஆன்லைனில் மனு அளித்துள்ளனா்.
மேலும், நீதிமன்றத்திலும் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
கேரளத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால் எங்கள் கட்சிக்காரா்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால், போலீஸாா் தங்களது விசாரணையை விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடத்த வேண்டும் என ஐஜியிடம் மனு அளித்துள்ளோம். நேரில் விசாரணை நடத்த முற்பட்டால் வழக்குரைஞா்களும் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.